கீழடி அகழாய்வு மூலமாக தமிழர்களின் தொன்மையும், வரலாறும் இன்று உலகத்துக்கு தெரிய வந்துகொண்டு இருக்கும் நிலையில், கீழடியை கிருஷ்ணரின் மண் என்று சொல்லிக்கொண்டு ஒரு கும்பல் கிளம்பி இருக்கிறார்கள் தெரியுமா?
மேலும், கீழடி பற்றிய உண்மையை வெளிக்கொண்டு வந்த தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களை இடமாற்றம் செய்து அந்த இடத்தில் வட இந்திய அதிகாரி ஒருவரை அமர்த்தியுள்ளனர்.. கீழடி வரலாறுகளுக்கு எதிரான இந்த செயல்பாடுகள் கிருஷ்ணரையும் – கீழடியையும் தொடர்புபடுத்தியது மூலமாக பேசுபொருளாகியுள்ளது.. அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கீழடி – சிந்து, கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பிறகு இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள் தமிழ்நாட்டில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாக, சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில கிடைத்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட அகழாய்வுகளிலேயே மிகப்பெரிய அகழாய்வாக சிவகங்கை மாவட்டம், கீழடி தொல்லியல் அகழாய்வு நடத்தப்பட்டு அது மூலமாக, சங்ககால மக்களின் தொல் எச்சங்களும், தமிழர்களின் பல்வேறு தொன்மையான பயன்பாட்டுப் பொருட்களும் கிடைத்தது.
கல்மணிகள், முத்துமணிகள், பெண்களின் கொண்டை ஊசிகள், பெண்கள் விளையாடிய சில்லு, தாயக்கட்டை, சதுரங்க காய்கள், சிறுகுழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மைகள், நூல் நூற்கும் தக்ளி, சுடுமண் உறைகேணிகள், வீடுகள் கட்ட பயன்படுத்தப்பட்ட சுட்ட செங்கற்கள், சங்ககால கட்டிடங்கள், பண்டைய ரோமானிய நாட்டின் உயா்ரக ரவுலட், ஹரிடைன் மண்பாண்டங்கள், சுடுமண் முத்திரை கட்டைகள் (இரப்பா் ஸ்டாம்ப்), எழுத்தாணிகள், அம்புகள், இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் எழுத்துக்களுடைய மட்பாண்ட ஓடுகள் என 5300-க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இவையெல்லாம் இதற்கு முன்னரே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளுக்கு சான்றாக கீழடியில் கிடைத்துள்ள பொருட்கள் உள்ளன. இதைவிட இன்னும் ஒரு முக்கியமான மற்றும் வியப்புக்குரிய விஷயம் கீழடியில் கிடைத்துள்ள எந்த பொருளும் மதம் சார்ந்த அடையாளங்களோடு இல்லாமல் இருக்கிறது.
இதுகுறித்து அரசியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில், “தங்களுடைய சித்தாந்தங்களுக்கும், புராணங்களுக்கும், வரலாற்று புனைவு கதைகளுக்கும் எதிராக ஒரு உண்மை தலைதூக்குகிறது என்றால் சங் பரிவார் அமைப்பு, முதலில் அதனை அலட்சியப்படுத்துவார்கள்.. அம்பேத்கர் RSS-க்கு ஆதரவு கொடுத்தார் என்று கூறியது; வள்ளுவருக்கு காவி உடைன்னு பல விஷயங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளது.
அந்த வரிசையில் தான் இப்போது கீழடிய கிருஷ்ணர் மண்ணாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் எதிரான, வலுவான சம்மட்டி அடி கொடுக்குற சம்பவமாக இருப்பது கீழடியில் கிடைத்த எந்த ஒரு பொருளும் மதம் அல்லது சமயம் சார்ந்த பொருட்கள் இல்லை என்பது தான். ஆனால், இங்க இந்து கடவுளான கிருஷ்ணரின் புராண கதைகளை கீழடியில் கிடைத்த தமிழரின் தொன்மைக்குள் புகுத்தி, கீழடியை தன்வசப்படுத்த பெரிய சதி நடக்கிறது” என கூறுகிறார்கள் விஷயமறிந்த அரசியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள்.
எனவே, இந்த தொகுப்பில் சொல்லப்பட்ட சமீபத்தில் கீழடியை மையப்படுத்தி நடந்து வரும் விஷயங்கள் மூலமாக தமிழர்களுக்கு எதிரான, தமிழர்களின் வரலாற்றை மழுங்கடிக்கும் முயற்சிகள் தமிழர்களுக்கு தெரிய வர வேண்டும்.. தமிழர்கள் தங்களுடைய வரலாற்றை தேடி மீட்டெடுக்க வேண்டும்.. அதன் மூலமாக தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான கலாச்சார படையெடுப்பையும், அழிவையும் முன்றிடிக்க வேண்டும். அந்த சூழல்லில் தான் தமிழர்களாகிய நாம் இருந்திருக்கிறோம்… இருக்கிறோம்… இருப்போம்… அந்த வகையில், நாம் செய்ய வேண்டியது ஒன்று தான், தமிழையும், தமிழர்களாகிய நமது பண்பாடு, கலாச்சர, வாழ்வியல் முறைகளை நம்மமோடு நிறுத்தி விடாமல் அடுத்த சந்ததிகளுடைய மனதில் ஆழமாக விதைப்பது தான்..