‘வீஹன்’ டயட் முறையில் கடந்த 5 வருடங்களாக காய்கனிகளை மட்டும் சாப்பிட்டு வந்த பெண் இன்ஸ்டா பிரபலம் உயிரிழந்தார்.
ரஷியாவை சேர்ந்த 39 வயதாகும் ஹனா சம்சனோவா என்ற பெண் ‘வீஹன்’ டயட் முறையில் கடந்த 5 வருடங்களாக பச்சை காய்கனிகளை மட்டும் சாப்பிட்டு வந்துள்ளார். மேலும், அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பிரபலமானார்.
இதற்காக, ஹனா சம்சனோவா உலகின் பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்கு கிடைக்கும் காய்கனிகளை சாப்பிட்டு அதன் பலன்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார்.
மேலும், காய்கள், பழங்கள், பயிறு, இலை போன்ற இயற்கை உணவுகளை சமைக்காமல் பச்சையாகவும் அவர் சாப்பிட்டு வந்துள்ளார். இதனிடையே, கடந்த சில மாதங்களாக ஹனா சம்சனோவா தனது உணவு முறையில் மேலும் சில கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்ததன் காரணமாக அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 21-ம் தேதி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஹனா சம்சனோவா உயிரிழந்துள்ளார். அவரது மரணம் குறித்த விசாரணையில் பட்டினி மற்றும் சோர்வு காரணமாக ஹனா சம்சனோவா உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹனா உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாய்லாந்தின் பழ சீசனுக்காக ஆர்வமாக உள்ளதாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், உடல் எடையை அதிகரிக்க நேரம் வந்துவிட்டது’ எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஹனா மரணத்திற்கு அதிக அளவிலான பச்சை காய்கனிகளை தொடர்ச்சியாக சாப்பிட்டதால் அவரது உடல் ஒத்துழைக்காமல் தொற்று ஏற்பட்டு ஹனா உயிரிழந்திருக்கலாம் என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹனாவின் தாயார் உயிரிழந்த தனது மகளின் உடலை ரஷியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 5 வருடங்களாக பச்சை காய்கனிகளை மட்டும் சாப்பிட்டு வந்த ‘வீஹன்’ பெண் பிரபலம் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.