வேலூர் மாவட்டத்தில் குளிர்பானம் என நினைத்து மதுவை அருந்திய சிறுவன் மரணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பாகுட்டையை சேர்ந்தவர் சின்னசாமி. 62 வயதான இவர், கூலி வேலை செய்து வந்துள்ளார். சின்னசாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. நேற்று முந்தினம் இரவு சின்னசாமி டாஸ்மாக் மதுக்கடையிலிருந்து மதுவாங்கி வந்து தனது வீட்டில் அருந்தியுள்ளார்.
மது அருந்துவதற்காக முறுக்கு உள்ளிட்ட சைடிஷ்களை தனது வீட்டில் வைத்து சாப்பிட்டுள்ளார். வழக்கமாக திண்பண்டங்களை சாப்பிடும் சின்னசாமியின் 5 வயது பேரன் ரித்திஷ், சம்பவத்தன்றும் சாப்பிட்டுள்ளான்.
சின்னசாமி மது அருந்திவிட்டு மீதமிருந்த மதுவை அங்கேயே வைத்துவிட்டு டிவி பார்க்க சென்றுவிட்டார். ரித்திஷின் தாயாரும் தேர்தல் நேரம் என்பதால் வீட்டுவாசலில் பிரச்சார்த்தை காண சென்றுள்ளார். அங்கு இருந்த மதுவை சிறுவன் ரித்திஷ், குளிர்பானம் என நினைத்து அருந்தியுள்ளான்.
மதுவை குடித்ததால் சிறுவனுக்கு கடுமையான இருமல் ஏற்பட்டுள்ளது. பேரனின் இருமல் சத்தத்தை கேட்ட சின்னசாமி சிறுவன் மது அருந்தியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக பெற்றோரிடம் தகவல் கூறிய சின்னசாமியை சிறுவனின் தாயார் கடுமையாக திட்டியதையடுத்து சின்னசாமிக்கு அந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சின்னசாமி மற்றும் சிறுவன் ரித்திஷை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
சின்னசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுவனை மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த சம்பவம் குறித்து வேலூர் போலீஸாருக்கு மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலூர் போலீஸார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மது அருந்தி தாத்தா மற்றும் பேரன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.