உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தங்களது வாழ்வை, மூன்று ஆண்டுகளாக அர்ப்பணித்த ஒப்பந்த செவிலியர்களை, கடந்த 31.12.2022 அன்று தமிழ்நாடு அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அப்போது, காலிப்பணியிடம் 3,300 இருந்த நிலையில், 3,290 தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், அக்கோரிக்கையை ஏற்க மறுத்து தமிழ்நாடு அரசு பணி நீக்கம் செய்தது.
கடந்த 2021, தேர்தல் வாக்குறுதி 356ல், ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறிய நிலையில், அதனை மீறி தமிழ்நாடு அரசு நடந்து கொண்டது வேதனை அளிப்பதாக, அப்போதே தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டி இருந்தது.
மூன்று ஆண்டுகள் பணி செய்த தங்களை மீண்டும் பணி அமர்த்தி, நிரந்தரம் செய்ய வேண்டும் என எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து வந்தது. இது குறித்து பல்வேறு கட்ட போராட்டங்களை அச்சங்கம் முன்னெடுத்ததின் விளைவாக, அரசுடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது.
அதே சமயம், மாவட்ட சுகாதார சங்கத்தின் மூலம், தற்காலிக மாற்றுப்பணி வழங்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டது. அதனையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தவில்லை.
இதன் காரணமாக, எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்கள் சங்கம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அவ்வழக்கில், பாதிக்கப்பட்ட எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்கள் உரிய தேர்வு நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. அதனால், செவிலியர்களுக்கு 6 வாரத்தில் பணி நியமனம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 12.07.2023 அன்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உயர்நீதிமன்ற உத்தரவினை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவின்படி மீண்டும் பணி கிடைத்து விடும் என நம்பியிருந்த செவிலியர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, மக்களுக்கான மருத்துவத்தை புறக்கணிப்பதுடன் மக்களை தனியார் மருத்துவக் கொள்ளைக்கு தள்ளிவிடுவதாகும். மருத்துவ சேவையில் இலாப நட்டக் கணக்குகளை அரசு பார்த்து கொண்டிருந்தால், எதிர்காலத்தில் பெரும் மக்கள் உயிர்சேதத்தை சந்திக்க நேரிடும்.
எனவே, உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, பணியிலிருந்து நீக்கப்பட்ட செவிலியர்கள் அனைவரையும் உடனே பணியில் சேர்ப்பதுடன் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.