திருவாரூர் மாவட்டம் மண்ணார்குடியில், அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 49 இடங்களில் 100க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் 2015 முதல் 2021ஆம் ஆண்டு வரை உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், அப்போது அரசுப்பதவியை தவறாக பயன்படுத்தி பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்து அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
காமராஜ் பேரிலும் அவரின் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், மற்றும் நெருங்கிய நண்பர்கள் பெயரிலும் 58,44,38,752 ரூபாய் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்பட 6 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 49 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜின் வீடு, மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், அதிமுகவை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாததால் தமிழக அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக ரெய்டு நடத்துவதாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.