கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் படகு சவாரி விடும் திட்டத்தை கைவிடுமாறு நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொது செயலாளருமான கேப்டன் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கேப்டன் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் படகு சவாரி விடும் திட்டத்தை கைவிட கோரி அறிக்கை தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சிகளுக்கு குடிநீர் ஆதாரமாக கொடைக்கானல் பேரிஜம் ஏரி உள்ளது.
கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரியில் ஷட்டர்கள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்படும் நீர் மதிகெட்டான் சோலை, அலங்காரம், சொக்கன் அலை, கண்ணக்கரை வழியாக 28 கிலோ மீட்டர் வனப்பகுதியில் பயணித்து சோத்துப்பாறை அணையை அடைந்து, அங்கிருந்து பெரியகுளம் மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு மூன்று கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் சுமார் 2 லட்சம் மக்கள் பயன் பெற்று வருகின்றனர். பெரியகுளம் மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கு பங்கும் விளைவிக்கும் வகையில் சுற்றுலா என்ற போர்வையில் பேரிஜம் அணையில் தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில் படகு சவாரி விடப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது.
காற்று மாசு, தண்ணீர் மாசு ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய வனத்துறையே இதுபோன்ற செயல்களை ஊக்குவிப்பது கண்டனத்துக்குரியது. பேரிஜம் ஏரியில் படகு சவாரி தொடர்ந்து நடைபெற்றால் சுற்றுலா பயணிகளால் அங்கு வீசப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்களால் தண்ணீர் மாசடைய வாய்ப்புள்ளது.
இதன் மூலம் குடிநீர் தேவைக்காக பேரிஜம் ஏரியை நம்பியுள்ள பெரியகுளம் மக்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி விடும். குடிநீர் ஆதாரத்தை பாதிக்காத வண்ணம் பேரிஜம் ஏரியில் படகு சவாரிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன் என கேப்டன் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.