தமிழ்நாடு அண்ணா கைவினைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு.இரா.ராஜேந்திரன். மாநில துணைத் தலைவர் திரு. செல்வமணி ஆகியோர் அளித்த பேட்டியில்..
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் விஸ்வகர்மா கௌசல் யோஜனா திட்டத்தின் படி 18 வகையான தொழில்களை செய்யக்கூடிய பாரம்பரிய கைவினைஞர்கள் சுமார் 30 லட்சம் பேருக்கு தொழில் வளர்ச்சிக்கு முதல் தவணையாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாவது தவணையாக ரூபாய் இரண்டு லட்சமும் மிகவும் குறைந்த வட்டியில் கடனாக வழங்கப்பட உள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆன நிலையில் எந்த ஒரு அரசியல்வாதியும் சிந்தித்துக் கூட பார்க்காத நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாரம்பரிய கைவினைஞர்களை பாதுகாக்கும் வகையில் மிகச் சிறந்த விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை அறிவித்து 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வருகின்ற 17ஆம் தேதி இத்திட்டத்தை முறையாக துவக்கி வைக்க உள்ளார்கள்.
இத்திட்டத்தின் வாயிலாக பாரம்பரிய கைவினைஞர்களுக்கு நவீன திறன் மற்றும் உலக அளவில் சந்தைப்படுத்துதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில தீய சக்திகள் இந்த திட்டம் பரம்பரை சாதி தொழிலை நோக்கி நகர்த்த படுகின்ற வர்ணாசிரம சதித்திட்டம் என்று விஸ்வகர்மா சமுதாய மக்களை மக்களை திசை திருப்பி வருகின்றனர்.
தற்போது நவீன தொழில் நுட்பங்களால் பாரம்பரிய கைத்தொழில்கள் முற்றிலுமாக அழிந்து வருகிறது. நிறைய தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தற்கொலை செய்து வருகின்றனர். மேலும்
லட்சக்கணக்கான கைவினைஞர்கள் பாரம்பரிய வேலைவாய்ப்புகளை இழந்து தவிக்கின்றனர். இந்த திட்டம் பாரம்பரிய கைவினைஞர்களை காப்பாற்றுவதற்காககவும், சமுதாய முன்னேற்றம் பெறுவதற்காகவும் உருவாக்கப்பட்ட திட்டமாகும்.
பாரம்பரிய கைத்தொழில் செய்பவர்களுக்கு எந்தவித உதவியும் செய்யாத சில அரசியல் கட்சிகள் சுய லாபத்திற்காக மத்திய அரசு செய்கின்ற உதவியை தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். விஸ்வகர்மா சமுதாய பெருமக்கள் விஸ்வகர்ம யோஜனா திட்டம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட நமக்கு எதிராக நாத்திகவாதிகள் செயல்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
எனவே, விஸ்வகர்மா சமுதாய மக்கள் பிரதமர் மோடி அவர்களின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்துக்கு முழு ஆதரவு அளித்து பயனடைய வேண்டும். விஸ்வகர்மா யோஜனா திட்டம் தொடர்பாக அவதூறு பரப்புவதை தீய சக்திகள் கைவிட வேண்டும் என அவர்கள் கூறினர்.