ட்விட்டரில் தங்கள் செய்திக் கட்டுரைகளைப் படிக்க (read news) அடுத்த மாதம் முதல் பயனர்களிடம் செய்தி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் என எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.
முன்னதாக, ட்விட்டரில் அனைவரும் தங்கள் பதிவுகள் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வழி அறிமுகப்படுத்தப்படும் என எலான் மஸ்க் கூறி இருந்த நிலையில், இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறார்.
இதற்காக, மாதாந்திர சந்தா திட்டமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது எனவும், சந்தா செலுத்தாதவர்கள், தாங்கள் விரும்பும் ப்ரீமியம் செய்தியை படிக்க வேண்டுமெனில் அதற்குரிய கட்டணம் செலுத்தி படிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், மாதாந்திர சந்தாவில் பதிவு செய்யாவிட்டால் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மாதாந்திர சந்தா செலுத்துபவர்கள் ப்ளூ டிக் பெறுவதுடன், நீண்ட ட்வீட்களை பதிவிடவும், தேவைப்பட்டால் பதிவிட்ட ட்வீட்களை எடிட்டிங் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் பொறுப்பை கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்ற எலான் மஸ்க் அன்று முதல் பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகிறார். அந்த வகையில், தற்போது இந்த மாற்றத்தை அவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
இந்த தளமானது “அடுத்த மாதம் முதல் ஊடக நிறுவனங்கள் ஒவ்வொரு கட்டுரைக்கும் பயனர்களிடம் ஒரே கிளிக்கில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும்” என்று கூறியுள்ள அவர்,
மேலும் “மாதாந்திர சந்தாவிற்கு பதிவு செய்யாத பயனர்கள் அவ்வப்போது கட்டுரையைப் படிக்க விரும்பும்போது அந்த ஒரு கட்டுரைக்கு அதிக விலையை செலுத்த வேண்டும் எனவும், இது ஊடக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இருவருக்கும் பயன் அளிப்பதாக இருக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.
பல ஊடக நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களை சந்தா கட்டணம் செலுத்திய பின் வாசிக்கும் வகையில் வடிவமைத்து உள்ளதால், ட்விட்டரின் இந்த புதிய கட்டணத் திட்டம் பற்றி பயனர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.