தான் சேர்த்து வைத்திருந்த 700 ரூபாய்க்கு மகேந்திரா தார் காரை வாங்கிவிடலாம் என்று சிறுவன் ஒருவன் தனது தந்தையிடம் பேசும் வீடியோ வைரலான நிலையில், அந்த வீடியோவை பார்த்த ஆனந்த் மகேந்திரா சிறுவனுக்கு பதில் அளித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த சிக்கு என்ற சிறுவன், தன்னிடம் உள்ள 700 ரூபாயை வைத்து மகேந்திராவின் தார் காரை வாங்க முடியும் என எண்ணி தந்தையிடம் கேட்டுள்ளார். அப்போது மகன் கூறியதை தந்தை வீடியோவாக எடுத்த அந்த நபர் அதனை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தந்தையிடம் பேசிய சிறுவனின் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ருசிகர கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆனந்த் மகேந்திரா வெளியிட்டுள்ள அந்த பதிவில்,
“எனது நண்பன் சோனி இந்த வீடியோவை எனக்கு அனுப்பி வைத்தார். ஆகையால் சிறுவனின் வீடியோக்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் பார்த்தேன். எனக்கு சிக்குவை பிடித்திருக்கிறது. ஒரே ஒரு பிரச்சினை என்னவென்றால் சிக்கு கூறியதை நாங்கள் செயல்படுத்தி தார் காரை 700 ரூபாய்க்கு விற்றால், விரைவிலேயே நாங்கள் திவாலாகிவிடுவோம்” என தெரிவித்துள்ளார்.