டெல்லியில் 18-ஆவது ஜி20 உச்சி மாநாடு கோலாகலமாக தொடங்கியது. கூட்டமைப்பில் உள்ள இதர நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்க முதல் நாள் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஜி20 உச்சி மாநாடு என்றால் என்ன? அது கூட்டப்படுவதற்கான நோக்கம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
ஜி-20:-
20-களின் குழு அதாவது Group of Twenty என்பதே சுருக்கமாக ஜி-20 என குறிப்பிடப்படுகிறது. 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் அமைப்பு (Group of Twenty Finance Ministers and Central Bank Governors) என்றும் இதனை கூறலாம்.
அதாவது, இந்த அமைப்பு இருபது உலக நாடுகள் மற்றும் நிதி வளங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டமைப்பாகும். இந்த அமைப்பில் உலகின் 19 வளர்ச்சியடைந்த நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினர்களாக உள்ளன.
உறுப்பு நாடுகள்:-
இக்கூட்டமைப்பில் அர்ச்சென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் உள்ளன.
பொருளாதார முன்னேற்றங்கள் அடிப்படியிலான நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட ஜி-20 நாடுகளின் பொருளாதாரம் மொத்த உலக உற்பத்தியில் 85% ம், உலக வணிகத்தில் 80% ம், மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் கொண்டுள்ளது. இந்த ஜி-20 மாநாட்டில் அந்தந்த நாடுகளின் அரசுத் தலைவர்கள் அல்லது நாட்டுத் தலைவர்கள் இதன் உச்சிமாநாடுகளில் கலந்து கொள்கின்றனர்.
நோக்கமும் முதல் மாநாடும்:-
1997-1998 இல் கிழக்காசிய நாடுகளில் அப்போது ஒரு பெரிய நிதி நெருக்கடி இருந்தது. ஆசிய நிதி நெருக்கடிக்குப் பிறகு, சர்வதேச நிதி அமைப்பு பற்றிய விவாதங்களில் வளர்ந்து வரும் முக்கிய சந்தை நாடுகளின் பங்கேற்பு அவசியம் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. அதையொட்டி முதல் G20 மாநாடு ஜெர்மனியின் பெர்லின் நகரில் 1999-ம் ஆண்டு நடைபெற்றது.
இந்த G20 மாநாடு ஒரு G8 நாடுகளின் விரிவாக்கம் என்று கூட சொல்லலாம். உலகின் வளர்ந்த பணக்கார நாடுகள், உலகின் வளரும் டாப் பொருளாதாரம் கொண்டு நாடுகளான சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளையும் சேர்த்து உருவாக்கியது தான் இந்த G20.
இந்த G20 மாநாடும் அதன் செயல்பாடுகளும், அனைத்து நாடுகளின் நலனுக்காக நிலையான உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
“ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்”:-
உலக நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒத்துழைப்பிற்காக நடந்து வரும் இந்த G20 மாநாட்டின் வரிசையில் 18-ஆவது மாநாடு இன்று டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய மாநாட்டின் முழக்கம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதுதான்.
டெல்லியில் பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்படப் போகின்றன? அது இதர நாடுகள் மட்டுமின்றி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் எத்தகைய முக்கிய பங்கு வகிக்கப்போகிறது? என்பதன் மீதே தேசத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வல்லுநர்களின் பார்வையும் உள்ளது.