நீதிமன்றத் தீர்ப்புகளைக் கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு மருத்துவர்களின்bஊதிய உயர்வு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மறுப்பது ஏன் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை 6 வாரங்களுக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டு, 6 மாதங்களுக்கு மேலாகியும் அதை நடைமுறைப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு தொடர்பான சிக்கலில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
திமுகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் அவர்கள் கொண்டு வந்த பல்வேறு சட்டங்கள், அரசாணைகள் குறித்து உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அளித்தத் தீர்ப்புகளை கொண்டாடும் தமிழக அரசு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழக அரசு மருத்துவர்களின் ஊதியத்தையும் உயர்த்த வகை செய்யும் விதத்தில் கலைஞர் அரசு 2009-ஆம் ஆண்டில் பிறப்பித்த அரசாணை எண் 354-ஐ செயல்படுத்த மறுப்பது ஏன்?
ஊதிய உயர்வு குறித்த அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்கும்படி உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை செயல்படுத்தாதது ஏன்? என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு வினா எழுப்பியுள்ளது. அந்த வினாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும்.
அரசு மருத்துவர்களின் கோரிக்கை மிகவும் எளிமையானது; நியாயமானது.7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய, மாநில அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் தொடக்கநிலை ஊதியம் ரூ.56,100 என்ற ஒரே அளவு தான். ஆனால், மத்திய அரசு மருத்துவர்களுக்கு முறையே 4, 9, 13, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் மாநில அரசு மருத்துவர்களுக்கு 8, 15, 17, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் தான் வழங்கப்படுகிறது. இதனால் 14-ஆம் ஆண்டில் தொடக்கத்தில் மத்திய அரசு மருத்துவர்கள் பெறும் அடிப்படை ஊதியமான ரூ. 1.23 லட்சத்தை, மாநில அரசு மருத்துவர்கள் 20-ஆவது ஆண்டில் தான் பெறுகின்றனர்; 14-ஆவது ஆண்டில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு ரூ.86,000 மட்டுமே கிடைக்கிறது. இந்த முரண்பாட்டை சரி செய்ய வேண்டும் என்பது தான் அரசு மருத்துவர்களின் கோரிக்கை ஆகும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2018-ஆம் ஆண்டு அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்திய போது, அவர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சுகாதாரத் துறை கூடுதல் செயலர் தலைமையிலான குழு, 354-ஆவது அரசாணையின் எதிர்கால சரத்துகளின்படி 5, 9, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க பரிந்துரைத்தது. ஆனால், அது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. 2018-ஆம் ஆண்டு அரசு மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கமிட்ட மு.க. ஸ்டாலின் அவர்களே, ஆட்சிக்கு வந்த பிறகு கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது அநீதியானது.
கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப் பட்டு வருகிறது. அவர்களுக்கு இணையான கல்வித்தகுதியும், பணிச்சுமையும் கொண்ட தமிழக அரசு மருத்துவர்களுக்கும் அவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது தான் சரியானதாக இருக்கும்.
எனவே, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக, தமிழக அரசு மருத்துவர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தின் 5, 9, 11, 12 ஆகிய ஆண்டுகளில் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என அன்புமணி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.