உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நமது நாட்டின் தேசிய விளையாட்டாக பார்க்கப்படுவது ஹாக்கி விளையாட்டு . இன்றைய இந்தியாவின் இளைய தலைமுறைகள் பல துறைகளில் தங்களது கால்தடத்தை அழுத்தமாக பதித்து கலக்கி வரும் நிலையில் விளையாட்டு துறையிலும் பல சாதனைகளை படைத்து வருகின்றனர் . அதிலும் குறிப்பாக ஹாக்கி விளையாட்டில் ஆண்கள் , பெண்கள் என இருவரும் பல சாதனைகளை படைத்துள்ளனர்.
அந்தவகையில் 8வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானின் ககாமிகஹரா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 திறமையான அணிகள் இரு பிரிவாக முறையே பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா , தென்கொரியா, மலேசியா, உஸ்பெகிஸ்தான், சீனத்தைபே ஆகிய அணிகளும்
‘பி’ பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் சீனா, இந்தோனேசியா, கஜகஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் போட்டிகளின் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்திலேயே உஸ்பெகிஸ்தானை 22-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இந்திய அணி நேற்று மலேசியாவை எதிர்கொண்டது.
இறுதி வரை பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக இரு அணிகளும் மிக கடுமையாக போரடின. இந்திய அணி தரப்பில் சிறப்பாக விளையாடிய மும்தாஜ் கான், தீபிகா கோல் அடித்து மலேசியா அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஏ பிரிவில் இந்திய அணி தற்போது முதல் இடத்தில் கெத்தாக உள்ளது . இந்திய அணியின் இந்த தொடர் வெற்றிக்கு நாட்டு மக்கள் , அரசியல் தலைவர்கள் என பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் .
தொடர் வெற்றியில் கிடைத்த நம்பிக்கையில் அடுத்தடுத்த போட்டிகளில் வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்கும் முனைப்பில் இருக்கும் இந்திய அணி இன்று கொரிய அணியை எதிர்கொள்கிறது .
இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.