தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்த நம் தேசத்தின் பொக்கிஷங்களாக இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு இன்று உரிய மரியாதையும் முறையான பாதுகாப்பும் வழங்கப்படுகிறதா என்று கேட்டால் அது கேள்விக்குறியே . அதிலும் குறிப்பாக பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு பாதுகாப்பு மிகவும் மோசமான நிலையில் .
அந்தவகையில் தேசத்தின் இரும்பு தூண்களான மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர் . பயிற்சிக்காக வரும் இளம் பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
வீரர்களின் இந்த போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இன்று வரை குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .
இதனால் மல்யுத்த வீரர்- வீராங்கனைகள் ஒலிம்பிக் உள்பட சர்வதேச போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப்போவதாகவும் அறிவித்தனர் . பின்னர் விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் அவர்களை சமாதானப்படுத்தி 5 நாட்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அந்த 5 நாட்கள் முடிந்துள்ள நிலையில் இதுவரை குற்றம்சாட்டப்பட்ட அந்த நபர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நீதிக்கான எங்களின் போராட்டம் தொடரும் என்றும் எங்கள் போராட்டத்திற்கு தடையாக, எங்களின் வேலை இருந்தால் அந்த வேலையையும் விட்டுவிட்டு போராடுவோம் என மல்யுத்த வீரர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர் .
இந்நிலையில் நாளுக்கு நாள் பதற்றத்தை ஏற்படுத்தும் மல்யுத்த வீரர்- வீராங்கனைகளின் போராட்டம் வலுவடைவதால் இதுகுறித்து மத்திய அரசு விரைந்து செயல்பட்டு பிரிஜ் பூஷன் மீது கொடுக்கப்பட்ட புகார் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென விளையாட்டு வீரர்களும் , அரசியல் தலைவர்களும் , திரை பிரபலங்களும் வலியுறுத்தி வருகின்றனர் .