thamarai maanadu | பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு இன்னும் சில தினங்களே இருப்பதாக கூறப்படும் நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி வளாகத்தில் தாமரை மாநாடு என்ற பெயரில் பிரமாண்டமான அரசியல் மாநாட்டை நடத்தி வருகிறது தமிழக பாரதிய ஜனதா கட்சி.
இதில் பங்கேற்பதற்காக இன்று மதியம் சென்னை வந்த நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலமாக கல்பாக்கம் சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட இந்தியாவின் உள்நாட்டு முன்மாதிரி வேக ஈனுலையின் துவக்கப் பணியைப் பார்வையிட்டபின் தாமரை மாநாட்டு மேடைக்கு வருகை தந்தார்.
இதையும் படிங்க: மோடியின் வருகையால் பாஜகவுக்கும் பலன் இருக்காது…- ஜெயக்குமார் ‘நச்’!
பல்லாயிரம் பேர் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் பிரதமரின் வருகைக்கு முன் வரவேற்புறை ஆற்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “காசி தமிழ்ச்சங்கத்தை நடத்திய நாயகர் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கிறேன். தமிழக குடும்பங்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த மோடியின் பொதுக் கூட்டத்திற்கு அனைவரையும் வரவேற்கிறேன்” எனத் துவங்கி, தமிழகத்தின் வளர்ச்சிக்காக மோடியின் மத்திய அரசு செய்த உதவிகள், மோடியின் பெருமைகள் போன்றவற்றை பட்டியலிட்டுக் கொண்டே வந்தவர்.
சமீபத்தில் பீகாரில் நடந்த இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் மோடியை விமர்சித்து பேசிய லல்லு பிரசாத் யாதவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தொண்டர்களை உற்சாகக் குரல் கொடுக்க வைத்தார்.அதாவது, நேற்று பீகார் தலைநகர் பாட்னாவில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் ‘ஜன் விஷ்வாஸ்’ யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1764639604135866388?s=20
அதில் உரையாற்றிய லாலு பிரசாத் யாதவ்,”நரேந்திர மோடிக்கு ஒரு குடும்பம் இல்லை. அவர் எப்போதும் வாரிசு அரசியலைப் பற்றிப் பேசுகிறார். எனவே, வாரிசு அரசியல் என்றால் என்ன? என்பதையும், தனக்கு ஏன் குழந்தைகள் இல்லை? என்பதையும் மோடி விளக்க வேண்டும்” என கடுமையாக விமர்சித்திருந்தார்.
லாலுவின் இந்த பேச்சானது நாடு முழுவதும் சர்ச்சையான நிலையில், பா.ஜ.க தலைவர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலரும் தங்கள் சமூக வலைத்தள கணக்குகளில் தங்களின் பெயருக்குப் பின்னால் ‘மோடியின் குடும்பம்’ என்ற வார்த்தையை இணைத்திருந்தனர். இந்நிலையில் தான், இன்று நடைபெறும் தாமரை மாநாட்டில் பேசிய எல்.முருனும், “ நமது குடும்பம்; மோடி குடும்பம் – நமது குடும்பம்; மோடி குடும்பம்” என உரக்கக் கூற, அங்கு கூடியிருந்த தொண்டர்களும் அவர் கூறியதை அப்படியே கோரசாகக் கூறி அரங்கத்தை அதிர வைத்தனர்.