பாகிஸ்தான் அணி வெற்றியை கொண்டாடுபவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்திருப்பது சமூக வலைதளங்களில் புயலை கிளப்பியுள்ளது.
கடந்த அக்டோபர் 24-ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற T20 உலக கோப்பைப் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது. பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றதை கொண்டாடியதாக கூறி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் 5 மாவட்டங்களிலிருந்து 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடுபவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படும் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதையடுத்து சிறப்பாக விளையாடியதாக ஸ்ரீகாந்த், பாலாஜி, ஹேமங் பதானி போன்ற வர்ணணையாளர்களும் பாகிஸ்தான் அணியை பாராட்டினர். இவர்கள் மீதும் தேச துரோக வழக்கு பாயுமா எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.