கோமியத்துக்கு 50% கூட ஜிஎஸ்டி வரி உயர்த்திக்கொள்ளுங்கள், ஆனால் இந்த பொருட்களுக்கான வரியை குறைக்க வேண்டும்’ என திமுக எம்.பி செந்தில் குமார் மக்களவையில் பட்டியலிட்டுள்ளார்.
அரிசி, கோதுமை, பால், தயிர் போன்ற பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி வரி விகிதத்தை உயர்த்தி 47-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் இந்த புதிய வரி விதிகள் கடந்த ஜூலை 18-ஆம் தேதி அமலுக்கு வந்தது.
எடையளவுச் சட்டத்தின்படி (Metrology Act), பேக் செய்யப்பட்ட பால், மோர், லஸ்ஸி உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரியாக விதித்து ஜூலை 18ஆம் தேதி முதல் அமலுக்கு வருமென கடந்த ஜூன் மாதமே ஜி.எஸ்.டி கவுன்சில் செய்தி வெளியிட்டது. விலக்கு அளிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, மாவு உள்ளிட்ட பொருட்களுக்கும் தற்போது 5 சதவீதமாக ஜி.எஸ்.டி விதித்து ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டன.
இதனால் அரிசி, கோதுமை, தயிர், லஸ்ஸி போன்ற பொருட்களின் விலை உயர்ந்தது. அரிசிக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அரிசி ஆலைகள்,கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் மீதான வரி விதிப்பால் விலை உயர்ந்து வருவதால், நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
வருமானத்திற்கேற்ப தேவைகளை சுருக்கி சிக்கனமாக வாழ்பவர்களின் நிலை, ஒருவேளை உணவு சாப்பிட கூட கடினமான சூழலாக மாறியிருக்கிறது. குறிப்பாக அரிசி, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட அன்றாடம் பயன்படுத்தக் கூடிய உணவுவகைகளின் அளவுகடந்த விலை உயர்வால் குடும்பத்தை நடத்துவதற்கே சாமானிய மக்கள் போராடுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் தான் மத்திய அரசு விதித்துள்ள பால், தயிருக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என மக்களவை எம்.பி செந்தில் குமார் மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்;
கோமியத்துக்கு ஜிஎஸ்டியை 50% கூட உயர்த்தி கொள்ளுங்கள். குழந்தைகள், பொதுமக்கள் பயன்படுத்தும் பால், தயிருக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்; தேர்தல் வந்தால் பெட்ரோல்,டீசல்,எரிவாயு சிலிண்டர் விலை உயர்வதில்லை, முடிந்தால் மீண்டும் உயர்கிறது என மக்களவையில் திமுக எம்.பி செந்தில் குமார் பேசினார்.