டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுக்கு பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகள் தான் காரணம் என்று உத்திர பிரதேச அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காற்றில் மாசுபாடு அதிகரித்து வருகிறது.. இதுவரை இல்லாத அளவுக்கு காற்றின் தரம் அங்கு மிகவும் மோசம் அடைந்துள்ளது. டெல்லியில் அதிகரித்துவரும் காற்று மாசைக் குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இன்று நடை பெற்ற இந்த வழக்கில் உத்தரப் பிரதேச அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் கூறுகையில், “டெல்லி, என்சிஆர் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுக்கு பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகள்தான் காரணம் என்றும் காற்று மாசுக்கும் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்தார்.
அதற்கு பதிலலித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “நீங்கள் சொல்வதைப் பார்த்தால், பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளைத் தடை செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களா? உங்கள் குறைகளை ஆணையத்திடம் தெரிவியுங்கள் அவர்கள் தீர்வு வழங்குவார்கள்” எனத் தெரிவித்தார்.