தன்னிடம் பேச மறுத்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், சுர்வயா டவுன் பகுதியை சேர்ந்தவர் ராஜ் குமார் கவுதம். 21 வயதான இவர் தனது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் இளம்பெண்ணிடம் பேச முயற்சி செய்திருக்கிறார். மேலும், செல்போன் மூலமாக அவரை தொடர்புகொள்ள நினைத்திருக்கிறார். ஆனால், தொடர்ந்து ராஜ் குமார் கவுதமிடம் பேச அந்த பெண் மறுத்து வந்திருக்கிறார். மேலும், அவரது எண்ணையும் அந்த இளம்பெண் தனது செல்போனில் பிளாக் செய்துள்ளார். இதனால் ராஜ் குமார் கவுதம் மிகுந்த கோபமடைந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலை அந்த இளம்பெண் அருகில் உள்ள சந்தைக்கு காய்கறி வாங்கச் சென்றிருக்கிறார். அப்போது அவரை சந்தித்த கவுதம் தன்னிடம் பேச மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்போது அங்கிருந்து இளம்பெண் நகர்ந்து செல்ல முயற்சித்திருக்கிறார். இதனால் மேலும் கோபமடைந்த கவுதம் அவரை கடுமையாக தாக்கியிருக்கிறார்.
இதனால் அங்கேயே மயங்கி விழ, அருகில் இருந்தவர்கள் ஓடோடி வந்து அவரை காப்பற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். இருப்பினும் மேல்சிகிச்சைக்காக வாரணாசியில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
தக்க நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் காயங்களுடன் தப்பித்திருக்கிறார் அந்த இளம்பெண். இந்நிலையில், ராஜ் குமார் கவுதமை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இதுபற்றி பேசிய பதோஹி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் அனில் குமார்,” பாதிக்கப்பட்ட பெண் முதலில் ஆரம்ப சுகாதார நிலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து அவர் உயர் சிகிச்சைக்காக வாரணாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் ஆபத்தான கட்டத்தில் இருந்த அவர் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையின் பலனாக தற்போது நலமாக இருக்கிறார். கைது செய்யப்பட்ட ராஜ் குமார் கவுதம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.