கேரளாவில் காதல் விவகாரத்தை பெற்றோரிடம் சொல்லிக் கொடுத்த பெண்ணை, உடன்பிறந்த சகோதரியே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் பரவூரைச் சேர்ந்த சிவானந்தன் – ஜிஜி என்ற தம்பதிக்கு விஸ்மயா, ஜித்து ஆகிய இரு மகள்கள் உள்ளனர். கடந்த 21ம் தேதி சிவானந்தன் மனது மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், வீட்டில் சகோதரிகள் மட்டுமே தனியாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில், சிவானந்தனும், ஜிஜியும் வீட்டிற்கு திரும்பிய போது, விஸ்மயா உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இளைய மகளான ஜிஜியும் காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விஸ்மயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன ஜித்துவை தேடிவந்தனர்.
இந்த நிலையில், காக்க நாடு பகுதியில் ஜித்துவை போலீசார் கண்டுபிடித்து, அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. அதில், அக்கா விஸ்மயாவை ஜித்துதான் மண்ணெண்ணை ஊற்றி எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. தனது காதல் குறித்து அக்கா விஸ்மயா பெற்றோரிடம் சொல்லிக் கொடுத்ததால் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்த சூழலில் வீட்டில் யாரும் இல்லாத போது, அக்காவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, வீட்டிலிருந்த மண்ணெண்ணை எடுத்து அக்காவின் உடலில் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. காதல் விவகாரத்தில் உடன்பிறந்த அக்காவையே தீர்த்துக் கட்டிய தங்கையை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.