“உலக செஸ் சாம்பியன்சிப் போட்டியில் இறுதிப் போட்டி வரை சென்ற பிரக்ஞானந்தாவுக்கு சென்னை வரும்போது வரவேற்பு வழங்கப்படும் “
“முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தில் பரிமாறப்படும் உணவின் தரம் குறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படும்”
“சந்திரயான் திட்டங்களில் தமிழர்கள் பங்கேற்றதால் தமிழ் மண்ணுக்கு பெருமை என்றாலும் , சந்திரயான் -3 திட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய விஞ்ஞானிகளுக்கும் , இந்தியாவுக்குமான வெற்றி”
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி..
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறிய அமைச்சர் உதயநிதி , பின்னர் மாணவர்களுடன் சேர்ந்து உணவருந்தினார். மேலும் மாணவர்களுக்கு லட்டுகளையும் அமைச்சர் உதயநிதி வழங்கினார் .
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டினை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி , காலை உணவு குறித்த விவரங்கள் அடங்கிய செயலியையும் ஆய்வு செய்தார். மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் தூய்மையாக இருக்கிறதா என்று நேரில் பார்த்தறிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி பள்ளிக்கூடத்தில் மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாட்டு பணிகள் குறித்த மாதிரி வரைபடங்களை பார்வையிட்டார்.
நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..
எந்த மாவட்டத்திற்கு ஆய்வுப்பணிக்கு சென்றாலும் , காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்வதே எனது முதல் பணியாக இருக்கும். எனவே நானும் இத்திட்டத்தில் ஒரு பயனாளியாகவே உள்ளேன்.
காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பள்ளிகளில் 30 முதல் 40 சதவீதம் வரை மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது.
சென்னையில் 358 தொடக்க பள்ளிகளில் , 65, 030 மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
காலை உணவுத்திட்டம் போல பல திட்டங்களில் தமிழகம் இந்தியாவிற்கு முன்னோடியாக உள்ளது.
காலை உணவுத்திட்டம் குறித்து அனைத்து இடங்களிலும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யப்படும். உணவுக்கூடங்களில் உணவு சமைக்கப்படுவது , வாகனங்களில் எடுத்து வந்து பரிமாறப்படுவது, எத்தனை மாணவர்கள் உணவருந்தினர் , உணவு தரமாக இருக்கிறதா என்பதை தலைமை ஆசிரியர்கள் செயலி மூலம் பதிவு செய்வர்.
சென்னை வரும்போது பிரக்ஞானந்தாவுக்கு வரவேற்பு வழங்கப்படும். உலக செஸ் சாம்பியன்சிப் போட்டியில் இறுதிப் போட்டி வரை சென்றதே பெரிய சாதனை , 19 வயதிலேயே இதை செய்துள்ளார் , இன்னும் பல சாதனைகளை அவர் செய்வார்.
சந்திரயான் திட்டங்களில் மூன்று தமிழர்கள் பங்கேற்றது தமிழ் மண்ணுக்கும் , தமிழ்நாட்டுக்கும் பெருமைதான் என்றாலும் இது ஒட்டுமொத்த இந்திய விஞ்ஞானிகளுக்கும் , இந்தியாவுக்குமான வெற்றி என்று கூறினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால், குரூப் -4 தேர்விலாவது தேர்ச்சி பெற முடியுமா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எழுப்பியிருந்த கேள்வி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்கவில்லை.