கோவையில், பிரபல யூடியூபரின் (YouTuber) வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதாகும் சுஹைல் என்ற யூடியூபர் (YouTuber) மற்றும் அவரது மனைவி பாபினா ஆகிய இருவரும் சேர்ந்து சுஹைல் விலாகர் மற்றும் சைபர் தமிழா ஆகிய யூடியூப் சேனல்களை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த தம்பதிக்கு 7 மாத பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், இந்த தம்பதியினர் சமீபத்தில் கோயம்புத்தூர் கே.ஜி.சாவடி பிச்சனூர் பகுதியில் தங்களுக்கு சொந்தமாக கனவு இல்லம் ஒன்றை கட்டி வந்தனர். மேலும், அந்த வீட்டின் கட்டுமான பணியின் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு நிகழ்வுகளையும் தங்களது யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டனர்.
இதனையடுத்து, இவர்களின் கனவு இல்லத்தின் பணிகள் முடிந்து கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கிரகப்பிரவேசம் செய்து புது வீட்டில் குடியேறினர். மேலும், அந்த வீட்டில்தான் தற்போது வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், சம்பவத்தன்று கொள்ளையர்கள் நள்ளிரவில் அவர்களின் வீட்டிற்குள் வந்து மொட்டை மாடியில் பதுங்கி இருந்துள்ளனர்.
அப்போது, அந்த மர்ம நபர்களில் ஒரு கொள்ளையன் மட்டும் வீட்டிற்குள் நுழைந்து கதவை தட்டி சுஹைலிடம் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்றுள்ளார். உடனே, சுதாரித்துக் கொண்ட சுஹைல் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த கொள்ளையனிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், கொள்ளையடிக்க வந்த நபர் புதுச்சேரியை சேர்ந்த 25 வயதாகும் அனுராம் என்பதும் இவர் யூடியுப் மூலம் சுஹைல் அதிக பணம் சம்பாதித்து இந்த வீட்டை கட்டி இருப்பதாக எண்ணி அதை கொள்ளையடிக்கும் நோக்கில் புதுச்சேரியில் இருந்து கோவைக்கு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.