சேலம் : சேலத்தில் நாளை நடைபெற உள்ள திமுக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்க அனைவரும் வருக என திமுக இளைஞரணி செயலாளரும்,
தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,
சேலம் அழைக்கிறது செயல்வீரர்களே வாரீர்!
லட்சோப லட்ச இளைஞர்கள் கூடிடும் கொள்கைத் திருவிழாவாக நம் திமுக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறவிருக்கிறது.
மாநில உரிமைகளை மீட்டெடுத்து இந்திய ஒன்றியத்தை காப்பதற்கு கழகத் தலைவர் அமைத்து தந்திருக்கும் வெற்றிக்களம் இது.
இந்தியாவின் வெற்றியின் மூலம் பாசிசத்தை வீழ்த்தி – பன்முகத்தன்மை காத்திட சேலத்தில் கூடிடுவோம்.
அனைவரும் வருக! என தெரிவிதுள்ளார்.
இதையும் படிங்க : தலித் மாணவி சித்ரவதை : குற்றவாளிகளை தப்பவிடக் கூடாது.. ராமதாஸ்!!
முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் நாளை நடைபெற உள்ள திமுக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தது மடல் எழுதியிருந்தார். அதில்,
இளைஞரணி மாநாடு! படைக்கட்டும் இந்தியாவின் புது வரலாறு!!
திமுக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு ஜனவரி 21-இல் சேலத்தில் எழுச்சியுடன் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாண்புமிகு இளைஞரணிச் செயலாளரும் இளைஞர் நலன் – விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான தம்பி உதயநிதி முன்னெடுத்து வருகிறார்.
இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் அவருக்குத் தோளோடு தோள் நின்று பணியாற்றுவதைக் காண்கிறேன்.
அதுபோலவே, சேலம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள கழக முதன்மைச் செயலாளர் – மாநாடுகளைச் சிறப்பாக நடத்திக்காட்டுவதில் வல்லவரான மாண்புமிகு கே.என்.நேரு அவர்களும்,
சேலம் மாவட்டக் கழக நிர்வாகிகளும் பந்தல் அமைப்பு தொடங்கி அனைத்து ஏற்பாடுகளையும் இரவு – பகலாக மேற்கொண்டு வருகிறார்கள்.
சேலத்தில் நடைபெறும் மாநில மாநாட்டிற்காக இளைஞரணியினர் ஏந்தியுள்ள ஒளிச்சுடர், காலம்தோறும் கொள்கை வெளிச்சம் பாய்ச்சிடும் அணியாக இளைஞரணித் திகழும் என்பதை மெய்ப்பிக்கிறது.
மாநாட்டில் தலைமையுரை ஆற்றுகின்ற உங்களில் ஒருவனான நானும் மனதளவில் என்றும் என்னை இளைஞனாகவே கருதுகிறேன்.
தம்பி உதயநிதி அழைக்கிறார். கழக உடன்பிறப்புகளே சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் திரண்டிடுவீர்.
நான் முன்பே சொன்னதுபோல கடல் இல்லாச் சேலம் மாவட்டம், கருப்பு – சிவப்புக் கடல் ஆகட்டும். இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும்” என தெரிவித்திருந்தார்.