மூடத்தனத்தை மறுக்கும் வகையில், கொளத்தூர் அருகே உயிரிழந்த திராவிடர் விடுதலைக் கழக தோழரின் உடலை பெண்கள் சுமந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இறந்தவரின் சடலத்தை பெண்கள் சுமக்கக்கூடாது. சுடுகாடுவரை பெண்கள் வரக்கூடாது என்னும் ஒருவகையான நம்பிக்கை இந்த சமுதாயத்தில் வேரூன்றி உள்ளது.
ஆனால் இவையெல்லாம் மூடத்தனம் என்றும், ஜாதிய ரீதியிலான அந்த சிந்தனைகள் நீக்கப்பட வேண்டும் என்றும் திராவிடர் விடுதலைக்கழகம் கருத்துக்களை விதைப்பதோடு அவ்வப்போது அதனை செயல்படுத்தியும் வருகிறது
இதையும் படிங்க: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழக தோழரான, கொளத்தூர் அய்யம்புதூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
அவரது உடல் வைக்கப்பட்டிருந்த பாடையை, திராவிடார் விடுதலைக்கழகத்தை சேர்ந்த பெண்கள் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றி சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.
இறந்தவர்களின் உடலை பெண்கள் சுமக்க கூடாது.. சுடுகாடு வரை பெண்கள் வரக்கூடாது என்ற மூடத்தனத்தை மறுத்து, மத, ஜாதிய சடங்குகளை மறுத்து பெண்களே முன்னின்று இறுதி நிகழ்வுகளை நடத்தியுள்ளன.
அய்யம்புதூர் பகுதி மக்களிடயே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் திராவிடர் கழக, திராவிட விடுதலைக் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.