காருக்குள் கருக்கலைப்பு : கள்ளக்குறிச்சியில் சொகுசு காரில் வைத்து கர்ப்பிணிகளுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 34 வயதாகும் மணிவண்ணன். இவர் பி.எஸ்சி. பட்டதாரி.
இந்நிலையில், மணிவண்ணன் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கழுதூர் கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனது மனைவி பெயரில் மருந்துக்கடை நடத்தி வருகிறார்.
அந்த மருந்துக்கடையில் அசகளத்தூரை சேர்ந்த 29 வயதாகும் கவுதமி என்ற பெண் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த மருந்துக்கடையில் கர்ப்பிணிகளுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்படுவதாக வேப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அகிலனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பேரில் உடனடியாக மருத்துவர் அகிலன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார், சம்பந்தப்பட்ட மருந்துக்கடைக்கு மருத்துவக் குழுவுடன் விரைந்து சென்று அதிரடி சோதனையில் இறங்கினர்.
அப்போது மருந்துக்கடையில் கருக்கலைப்பு செய்ய பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, மருந்துக்கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மணிவண்ணனுக்கு சொந்தமான சொகுசு காரை சோதனையிட்டனர். அதில் கர்ப்பிணியின் கருவில் வளரும் சிசு ஆணா? அல்லது பெண்ணா? என கண்டறியும் ஸ்கேன் கருவி இருந்துள்ளது.
அதையடுத்து மருந்துக்கடையில் இருந்த மணிவண்ணன், கவுதமி, தினேஷ், கண்ணதாசன் ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், மணிவண்ணன் தனது மனைவியின் பெயரில் மருந்துக்கடை நடத்தி வருவதும், கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கர்ப்பிணிகளை,
புரோக்கர்கள் மூலம் கண்டறிந்து, அவர்களை காரில் அழைத்து வந்து, ஓடும் காரில் ஸ்கேன் கருவி மூலம் கருவில் உள்ளது ஆணா? பெண்ணா? என கண்டறிந்து மருந்துக்கடையில் வைத்து கருக்கலைப்பு செய்ததும் தெரியவந்துள்ளது.
இதற்காக சம்மந்தப்பட்ட கர்ப்பிணிகளிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பெற்றதும் தெரியவந்தது.
February 1ST 2024 : இன்றைய ராசி பலன்!!
இந்த கருக்கலைப்புகளுக்கு கவுதமி உடந்தையாக இருந்துள்ளார் (காருக்குள் கருக்கலைப்பு). மேலும், அசகளத்தூரை சேர்ந்த தினேஷ், கண்ணதாசன் ஆகியோர் புரோக்கர்களாக செயல்பட்டுள்ளனர்.
இதையடுத்து கருக்கலைப்பு செய்ய பயன்படுத்தப்பட்ட ஸ்கேன் கருவி, சொகுசு கார் மற்றும் மருந்துக்கடையில் இருந்த கருக்கலைப்பு மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில்,
மணிவண்ணன் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.