கோயம்பேடு முனையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என உயர்நீதிமன்றம் (ஹைகோர்ட்) உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்தது. இது சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காகவும்,
சென்னைக்குள் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
அந்த வகையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், ஜனவரி 24ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் (ஹைகோர்ட்) வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில், “சென்னைக்கு உள்ளேயே பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கினால், பேருந்து கிளாம்பாக்கம் செல்வதற்கு முன்னதாகவே இருக்கைகள் நிரம்பிவிடும்.
எனவே, கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் கொண்டு வந்ததன் நோக்கமே வீணாகிவிடும்” என நீதிபதி தெரிவித்தார்.
இதனால், வழக்கு விசாரணையை நேற்று பிப்ரவரி.9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து பணிமனைகளை ஏற்கனவே மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.
அதனால், மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்” என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, ஆம்னி பேருந்துகளுக்கு உத்தரவு கிடைத்துள்ள நிலையில், அரசு பேருந்துகளையும் கோயம்பேட்டிலிருந்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.