தமிழ்நாட்டில் 10ஆம் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியான நிலையில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
2023ம் கல்வியாண்டிற்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 13ஆம் முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், 11-ம் வகுப்பு வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்திருந்தது.
அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை பத்து மணிக்கு வெளியாகிய நிலையில், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
11ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் 90.93% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்களை விட மாணவிகள் 7.37 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவியர்கள் 3 லட்சத்து 91 ஆயிரத்து 968 பேரும், மாணவர்கள் 3 லட்சத்து 14 ஆயிரத்து 444 பெரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் 94.36 சதவீதமாக உள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 86.99 சதவீதமாக உள்ளது.
மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும் sms மூலமாகவும் முடிவுகளை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.