தமிழ்நாட்டுக்கு சொந்தமான சோழர் காலத்தைச் சேர்ந்த சிலை வெளிநாட்டில் கண்டுபிடித்து அதனை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை, சிலை திருட்டு தடுப்புப் பிரிவு. கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு. சைலேஷ் குமார் யாதவ் இ.கா.ப. அவர்கள் வெளிநாட்டு அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ள தமிழக கோயில்களுக்கு சொந்தமான சிலைகளை தனிப்படை அமைத்து வெளிநாட்டு இணையதளங்களை ஆய்வு செய்து கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.
அதன்படி சென்னை சிலைதிருட்டு தடுப்புப்பிரிவு காவல்துறை தலைவர் முனைவர். இரா, தினகரன், இ.கா.யட அவர்களின் தலைமையில், சிலைதிருட்டு தடுப்புப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சிவக்குமார் அவர்களின் மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், திருச்சி, திரு பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேற்படி தனிப்படையினர் மேற்கொண்ட தொடர் முயற்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த கலிய கல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணர் (பாம்பின் மேல் நடனம் செய்யும் கிருஷ்ணர்) உலோக சிலை வெளிநாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2008-ம் வருடம் நவம்பர் மாதம் லூயிஸ் நிக்கல்சன் என்பவரால் பதிவேற்றம் செய்யப்பட்ட “Gold of the Gods” என்ற ஒரு கட்டுரையைக் கண்டறிந்தனர், அதில் கலிய கல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணர் (குழந்தை கிருஷ்ணர் காளிங்கன் எனப்படும் பாம்பின் மேல் நடனமாடும் நிலையில் உள்ள) உலோக சிலையின் புகைப்பட படத்தை அந்த வலைதளத்தில் கண்டறிந்தனர்.
பின்னர் பல்வேறு இணையதளங்களில் இச்சிலை குறித்த தகவல்களை தனிப்படையினர் மேலும் சேகரிக்க தொடங்கினர்.அப்போது “Hold on to Your Hat: Antiquities dealer Douglas Latchford, a/k/a Pakpong Kriangsak” என்ற பெயரில் ஒரு கட்டுரை 27.09.2019 அன்று “Association for Research intoCrimes Against Art” (ARCA) என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
மேலும்,லாட்ச்ஃபோர்டு என்பவர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் என்பதும் அவர் கம்போடியா, இந்தியா, தென் கிழக்கு ஆசியா மற்றும் இதர நாடுகளில் உள்ள தொன்மை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் சிலைகளை சேகரிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதும் அத்துடன் பன்னாட்டு கள்ளச்சந்தையில் விற்பது மற்றும் வாங்குவது போன்ற செயல்களை செய்யக்கூடியவர் என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து விசாரணை செய்தபோது கலிய கல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணரின் உலோக சிலை தற்சமயம் அமெரிக்காவில் உள்ள HSI என்ற அமைப்பின் வசம் இருப்பதையும் தனிப்படையினர் கண்டறிந்தனர்.
மேலும் தனிப்படையினரின் விசாரணையில் டக்ளஸ் லாட்ச்ஃபோர்டு (2020 ஆம் ஆண்டு இறந்துவிட்டார்) இச்சிலையை சுபாஷ் சந்திர கபூரிடமிருந்து 2005 ஆம் ஆண்டு 6,50.000 அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பு ரூபாய் 5.2 கோடி) வாங்கியதும் இதற்கு நான்சி வைனர் என்ற சிலை மதிப்பீட்டாளர் சுபாஷ் சந்திர கபூருக்கு இச்சிலை சம்பந்தமான போலி ஆவணங்கள் தயாரிப்பதற்கு உதவியதும் தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், மேற்படி உலோக சிலையானது பிற்காலச் சோழர் காலமான 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும்,கலிய கல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணரின் சிலை என்பது நிரூபணமாகிறது.