இந்தோனேசியாவில் உள்ள நிக்கல் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த 13 ஊழியர்கள் உயிரிழந்தனர்.
மின்சார வாகன பேட்டரி உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக உள்ள நிக்கல் கனிம உற்பத்தியில் இந்தோனேசியா முதல் இடத்தில் உள்ளது.
அந்தவகையில், இந்தோனேசியா சுலவிசி தீவில் சீன நிறுவனத்தின் நிதி உதவியில் நிக்கல் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்தில் சிக்கி தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த 13 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 38 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 5 ஊழியர்கள் சீனாவை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
முதற்கட்ட விசாரணையில் தொழிற்சாலையில் வழக்கமான பழுதுநீக்கும் பணியின்போது இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.