தண்ணீர், உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளுக்காக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் ஆப்பிரிக்க நாட்டு மக்கள் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் தண்ணீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக அரபு மொழி பேசுபவர்களுக்கும், வேற்று மொழி பேசும் சிறுபான்மைக் குழுக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தக் கலவரத்தில் இதுவரை 168 பேர் உயிரிழந்துள்ளனர்.
சூடானில் 2019-ம் ஆண்டு அதிபர் ஒமர் அல் பஷீரின் சர்வாதிகார ஆட்சி மக்கள் போராட்டத்தின் காரணமாக அகற்றப்பட்டது. அதன் பிறகு, புதிய அரசை அமைக்க ஜனநாயக ரீதியிலான வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில் அங்கு அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. இதற்கு எதிராக சூடானில் தொடர்ந்து மக்கள் புரட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தொடர் மக்கள் புரட்சி காரணமாக சூடானின் பல இடங்களில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, உணவு, தண்ணீர், கால்நடைகள், வளம் நிறைந்த இடங்கள் ஆகியவற்றைக் கைப்பற்ற அரபு மொழி பேசும் பழங்குடி மக்களுக்கும், வேற்று மொழிகளை பேசும் சிறுபான்மை பழங்குடிக் குழுக்களுக்கும் இடையே அண்மைக்காலமாக பயங்கர மோதல் நடந்து வருகிறது.
அந்த வகையில், நேற்று சூடானில் உள்ள மேற்கு டார்ஃபூர் பகுதியில் இருதரப்புக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்றது.
வீடுகளும், கால்நடை பண்ணைகளும் சூறையாடப்பட்டன. பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையில் இதுவரை 168 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.