நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த போதமலையில் உள்ள கீழூர் ஊராட்சி கெடமலையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 75 இலட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆகியோர் இணைந்து வழங்கினார்.
முன்னதாக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஆயில்பட்டி மலை அடிவாரத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று, மலை கிராமத்தை அடைந்து, பொதுமக்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. இம்மலை கிராமத்திற்கு முதன் முதலாக அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியரும் நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றது குறிப்பிடதக்கது.
முன்னதாக, போதமலையின் அடிவாரப் பகுதியான ஆயில்பட்டி கிராமத்தில், மாநில மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறிய அவர்,
தமிழ்நாடு அரசின் மருத்துவ சேவைகளை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கும் விதமாக 5.08.2021 அன்று “மக்களை தேடி மருத்துவம்” திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம் ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தில் இதுவரை 75 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். அந்த 75 இலட்சமாவது பயனாளிகள் போதமலை மலைப்பகுதியில் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவத்துறையில் காலியாக உள்ள, 1,021 மருத்துவர் பணியிடங்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மருத்துவ தேர்வு வாரியம் மூலம், தற்போது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாத இறுதிக்குள் அந்த அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டு, மருத்துவர்கள் அந்தந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும்,
அரசு மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பணியின்போது மருத்துவமனையில் இல்லாதவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் பணியில் இல்லாமல் சுற்றுலா சென்ற மருத்துவர் சண்முகவடிவும்,
அதே மருத்துவமனையில் மருத்துவர் தினகரன் தனது மகனை அரசு மருத்துவமனையில் பணியில் ஈடுபடுத்திய காரணத்திற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்த மருத்துவ துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தெரிவித்தார்.
நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, இன்னும் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் பணிகள் மற்றும் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைத்தல் ஆகிய பணிகளுக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு ஆறுமாதத்தில் அப்பணிகள் முடிக்கப்பட்ட பிறகு முழுமையாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கும். அதுவரை நாமக்கல் நகரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அதே இடத்தில் செயல்படும்.
இம்மாவட்டத்திற்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கிடைத்துள்ளதால் இராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு ஆகிய அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்காக ரூ. 47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இராசிபுரம் தலைமை மருத்துவமனைக்கு கூடுதல் கட்டட வசதிகள் ஏற்படுத் தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இராணுவத்தில் அக்னிபத் திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்ப்பது ஏற்கத்தக்கது அல்ல என ஏற்கனவே தமிழக முதலமைச்சர் தெரிவித்துவிட்டார். இதனை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.