அக்டோபர் 7-ம் தேதி வரை ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
முன்னதாக ரிசர்வ் வங்கி, ரூ.2000 நோட்டுகளின் புழக்கத்தை கட்டுப்படுத்த அதனை இன்று செப்டம்பர் 30-ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது. அதோடு, செப்.30-க்குள் ரூ.2000 நோட்டுக்களை மாற்றாவிட்டால் அது வெறும் தாளாக மட்டுமே இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கூறி இருந்தது.
இந்நிலையில், தற்போது ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகும் ரூ.2000 நோட்டுகள் செல்லும் என்றும், ஆனால் அவற்றை ரிசர்வ் வங்கியின் பட்டியலிடப்பட்டுள்ள 19 அலுவலகங்களில் மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது.
தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ ஒரு நேரத்தில் அதிகபட்சம் ரூ.20,000 வரை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என்றும், ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் பணத்தை மாற்றுவதாக இருந்தால், பணத்தை தபால் அலுவலகம் மூலமாக மட்டுமே அனுப்ப முடியும். அவ்வாறு அனுப்பப்படும் பணம் சம்பந்தப்பட்ட நபர் அல்லது நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவது ரிசர்வ் வங்கியின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நீதிமன்றங்கள், சட்ட அமைப்புகள், அரசு துறைகள் ஆகியவை ரூ.2000 நோட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களுக்கு அனுப்பி வரவு வைத்துக்கொள்ள முடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2000 நோட்டுகளை கடந்த மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென திரும்ப பெறுவதாக அறிவித்தது. மேலும், 2023 செப்.30-ம் தேதிக்கு பிறகு ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்றும், அந்த நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவித்த நிலையில், ரூ.2000 நோட்டுக்கள் மாற்றப்பட்டு வந்தன.
இதனால், புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகள் 93 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாகத் கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டது. அவ்வாறு பெறப்பட்ட ரூ.2000 நோட்டுகள் 87 சதவீதம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டன என்றும், மீதமுள்ள 13 சதவீதம் வேறு நோட்டுகளாக மாற்றிக் கொள்ளப்பட்டன என்றும் தெரிவித்திருந்தது.