தென் அமெரிக்க கடற்கரையில் கரை ஒதுங்கிய பென்குவின்களின் வயிற்றில் உணவு பொருட்கள் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென் அமெரிக்காவில் உள்ள உருகுவே நாட்டின் கடற்கரை பகுதியில் கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பென்குவின்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
கரை ஒதுங்கிய பென்குவின்கள் “மெகலானிக் பென்குவின்” என்று அழைக்கப்படும் வகையாகும். இவை, அட்லாண்டிக் கடலில் உயிரிழந்து இருக்கலாம் எனவும், அதன் பின்னர் உருகுவே கடற்கரைக்கு அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இவ்வாறு ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பென்குவின்கள் உயிரிழக்க காரணம் என்ன? என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், கரை ஒதுங்கிய பென்குவின்களுக்கு இன்புலுயென்சா காய்ச்சல் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்த நிலையில், கரை ஒதுங்கி இருக்கும் பென்குவின்கள் அனைத்தும் இளம் வயதுடையவை என்றும், அவற்றின் வயிற்றில் உணவு பொருட்கள் எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், உணவு பற்றாக்குறையின் காரணமாக பென்குவின்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும், இது தொடர்பாக அடுத்தகட்ட ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.