வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது .
வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், மூன்று ஒரு நாள் மற்றும் 5, 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளது .
இதில் டெஸ்ட் தொடரை கெத்தாக கைப்பற்றிய இந்திய அணி தற்போது மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது . அந்தவகையில் இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள உலக புகழ் பெற்ற கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது.

இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சன், அக்ஷர் பட்டேல் ஆகியோர் அணியில் இடம் பிடித்தனர். ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணிக்கு தலைமை தாங்கினார் .
இதையடுத்து இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய்ஹோப் முதலில் பந்துவீச முடிவு செய்தார் . இதையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி முதலில் பேட் செய்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன், சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர் . சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 34 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த ஓவரிலேயே இஷான் கிஷனும் 55 ரன்களில் வெளியேறினார் .

அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 9 ரன் , அக்ஷர் பட்டேல் 1 ரன் , ஹர்திக் பாண்ட்யா 7 ரன் ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேற ஆட்டம் தலைகீழாக மாறியது . 24.1 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் சுமார் 40 நிமிடம் ஆட்டம் தடைபட்டது .
பின்னர் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவும் 10 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற . சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடிய சூர்யகுமார் யாதவ் 24 ரன்னிலும் ஷர்துல் தாக்குர் 16 ரன்னிலும் வந்த வழி சென்றனர். 40.5 ஓவர்களில் இந்திய அணி 181 ரன்னில் சுருண்டது.
இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட்இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிராண்டன் கிங் மற்றும் மேயர்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.
அணிக்காக சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்த இந்த ஜோடியில் மேயர்ஸ் 36 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து வந்த பிராண்டன் கிங் 15 ரன்களும், அதான்ஸே 6 ரன்களும், ஹெட்மயர் 9 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

இதையடுத்து ஷாய் ஹோப்புடன், கார்டி ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் ஷாய் ஹோப் தனது அரை சதத்தை அழகாக பதிவு செய்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில் ஷாய் ஹோப் 63 (80) ரன்களும், கார்டி 48 (65) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 36.4 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி அபார வெற்றிபெற்றது.
3 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில் ஆட்டம் தற்போது சமமாக உள்ளதால் 3 ஆவது ஒருநாள் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.