பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் நடந்த குண்டுவெடிப்பில், 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
லூதியானா நகரின் மையப்பகுதியில் மாவட்ட ஆணையர் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்றம், இயங்கிக்கொண்டிருந்த நேரத்தில் நீதிமன்ற வளாகத்தின் மூன்றாவது மாடியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில், 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5 பேர் காயமடைந்துள்ளனர். நீதிமன்றக் கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதுடன் ஜன்னல்களும் உடைந்து நொறுங்கியுள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் குவிந்தனர்.
பஞ்சாபிலும் இந்தியாவிலும் அமைதி நிலவுவதை விரும்பாதவர்கள் இந்தக் குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கிறார்கள்” என பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி கூறியிருக்கிறார்.
இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பெற்காத நிலையில், இந்தக் குண்டு வெடிப்பில் காலிஸ்தானி இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்று சந்தேகங்களும் எழுந்துள்ளன.
இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தேசியப் புலனாய்வு முகமையும் இச்சம்பவம் குறித்த விசாரணையில் இறங்கும் எனத் கூறப்படுகிறது.