சேலத்தில் இளம்பெண் ஒருவர் கை கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில், மீட்கப்பட்ட விவகாரம் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேலத்தில் மசாஜ் செண்டர் நடத்தி வந்த இளம்பெண் ஒருவர் அழுகிய நிலையில், சூட்கேசில் இருந்து மீட்கப்பட்டார். இந்த விவகாரம் சேலம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த மர்ம மரணத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. பிணமாக மீட்கப்பட்ட தேஜ்மண்டல் வீட்டருகே குடியிருந்த 2 இளம்பெண்கள் உட்பட 3 பேரும், தேஜ்மண்டல் இறந்திருக்ககூடும் என கணித்த அந்த 5 நாட்களாக காணவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில், 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுவதால், தேஜ்மண்டலின் கணவர் பிரதாப் உட்பட, தேஜ்மண்டலுடன் தொடர்பில் இருந்த பலரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் முடிவு செய்துள்ளனர்.
முதற்கட்டமாக பிரதாப்பிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் தேஜ்மண்டலின் கணவர் இல்லை என்பதும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கமாகி திருமணம் செய்யாமல் ஒன்றாக இருவரும் வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
தேஜ்மண்டல் முன்னதாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், தற்போது அந்த தொழிலில் பழக்கமானவர்கள் சிலருடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரிகிறது. இதனால், முன்பு தொழில் ரீதியாக தொடர்பில் இருந்தவர்கள், மசாஜ் செண்டர் மூலம் அவருக்கு பழக்கமானவர்கள் உட்பட பலரையும் போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் தேஜ்மண்டல் மீது பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி காவல் நிலையங்களில் விபச்சாரம் நடத்தியதாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இளம்பெண் மரணம் தொடர்பாக, 5 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
குறிப்பாக தலைமறைவாக இருக்கும் அந்த 3 பேரையும் பிடித்தால் மட்டுமே, தேஜ்மண்டல் மரணத்திற்கு விடை கிடைக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.