Stalin’s 3 questions to Modi : மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதற்கட்ட தேர்தல் தமிழகத்தில் ஒரேகட்டமாக நடைபெறுகிறது.
வரும் ஏப்.19-ம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் கடந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கலானது மார்ச் 27-ம் தேதி நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து 30ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அந்தந்த கட்சிகளின் ஸ்டார் பேச்சாளர்கள் ஆகியோரும் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்து வருவதால் அரசியல் களம் அனல் பறக்க துவங்கியுள்ளது.
அதே போல, மிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக ஆகியவை ஒவ்வொரு கட்சிகளையும் அதன் கொள்கைகளையும் சுட்டுக்காட்டி கேள்வி எழுப்புவதும், அதற்கு சம்பந்தப்பட்ட கட்சித்தலைவர்கள் பதில் அளிப்பதும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில்தான், “திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றும் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்?” என்று தமிழக மக்கள் 3 கேள்விகளை கேட்பதாக கேட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது,
“பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான் Stalin’s 3 questions to Modi.
- தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?
- இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?
- பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?
திசை திருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே என்று முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
கச்சத் தீவு விவகாரம் தற்போதைய தேர்தல் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த கேள்விகளை பதிவிட்டுள்ளார் ஸ்டாலின்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டது. அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி அதனை கண்டு கொள்ளவில்லை என்று இப்போது குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது.
கச்சத்தீவை தாரை வார்த்து தமிழக மீனவர்களை இடையூறுக்கு ஆளாக்கிய காங்கிரசுடன் திமுக கூட்டணி வைப்பதா என்றும் கேள்விகள் எழுப்பப்படுகிறது.
இப்படி திமுகவுக்கு எதிராக அம்புகள் வீசப்படும்நிலையில், கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்றும் எதிர்கணைகள் தொடுக்கப்படுகின்றன.
தேர்தல் நேரங்களில் மட்டுமே தங்களின் வாக்கு சேகரிப்புகாக கச்சத்தீவு குறித்து பேசுகிறார்கள் என்றும், மற்ற நேரங்களில் எந்த அரசியல் கட்சியும் கண்டுகொள்ளவில்லை என்றும் மீனவர்கள் தரப்பில் குமுறல் இருந்துகொண்டே இருக்கிறது” என கேள்வி கேட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இதையும் படிங்க : ஆன்லைன் ரம்மி தற்கொலை; உயிர்களைப் பறிக்கும் தமிழக அரசு – அன்புமணி காட்டம்!