கடலூர் புதுவண்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பழமையான சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக (Kumbabhishek) விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது 300 ஆண்டுகள் பழமையான சிவசுப்ரமணிய திருக்கோயில். இந்த ஆலயத்தில், வேல் கோட்டம் தனியே அமைத்து கிருத்திகை, பூச நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த ஆலயத்தில் வழிபடுபவர்களுக்கு எல்லாவித பலன்களும், தீராத கொடிய நோய்களும் தீரும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
மேலும், மூலவர் சிவசுப்பிரமணிய பெருமாள் வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தருகிறார். சிவனிடம் “செண்டு” என்ற ஆயுதம் பெற்று மேருமலையின் ஆணவத்தை அடக்கிய விழாவும், ஆனி மாதத்தில் நடராஜருடன் மாணிக்கவாசகர் இரண்டர கலக்கும் விழாவும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இச்சிறப்பு மிக்க இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக (Kumbabhishek) விழா இன்று நடைபெற்றது. இதற்காக, கடந்த 27 ம் தேதி சங்கல்பம் அனுஞ்ஞை, கணபதி பூஜை, கோ பூஜை, கஜபூஜை, பூர்ணாஹூதி உள்ளிட்டவையுடன் நிகழ்வு தொடங்கி இன்று யாகசாலை பூஜை நடைபெற்றது.
இதனையடுத்து, 5ம் தேதியான இன்று காலை 8.30 மணி முதல் 10.30 மணிக்குள் இராஜகோபுர விமானங்கள் மீது கலசநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில், மேயர் சுந்தரி ராஜா உள்ளிட்ட உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.