நான்கு சதவீதம் பேர் தங்கள் மதவெறிக்காக மகாத்மா காந்தியை கொலை செய்தார்கள் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலயோலா கல்லூரியில் மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சிறுபான்மையர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், அரசு கொறடா கோவி.செழியன், சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது மறைந்த கலைஞர் அவர்களின் சட்டமன்ற சாதனைகளை எடுத்துரைக்கும் நிகழ்வாக மாணவர்கள் மத்தியில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு
தமிழ்நாடு சுதந்திரத்திற்கு முன்பு ,திராவிடம் வருவதற்கு முன்பு தமிழகம் இவ்வாறு இருந்ததில்லை.ஐந்தரை கோடி மக்களில் 100 பட்டதாரிகள் தான் இருந்தனர்.
100 பட்டதாரிகளில் 94 சதவீதம் பேர் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
1921 ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை உண்டு என்பதை கொண்டு வந்தது நீதிக்கட்சி.ஐந்து முறை முதல்வராக, எதிர்க்கட்சித் தலைவராக, 13 முறை போட்டியிட்டு அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்றவர் கலைஞர் என்று தெரிவித்தார்.
இங்கு எல்லோரும் பட்டதாரியாக இருப்பதற்கு பள்ளிகள் முடித்து கல்லூரி செல்வதற்கு உறுதுணையாக இருந்தவர் கலைஞர்.அதனால்தான் இன்று பள்ளியில் இருந்து கல்லூரி செல்பவர்கள் 54 சதவீதமாக இருக்கிறோம்.
பெண்கள் கல்வி பயில உதவி தொகையாக 12,000 வரை கொடுத்து படிக்க வைத்தார்.இந்தியாவில் 21% பெண்கள் பட்டம் பெற்றிருந்தால், தமிழகத்தில் பெண்கள் 75 சதவீதம் பேர் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.1970 இல் ஆதரவற்றவர்களுக்காக கருணை இல்லம் திட்டத்தினை கலைஞர் செயல்படுத்தினார்.
சந்திராயன் ஆதித்யா போன்ற சாதனையை செய்திருக்கிறோம் என்றால் அதற்கு உறுதியாக இருந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.
முதுகலை நீட் நுழைவுத் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்று இருந்தால் முதுகலை மருத்துவ படிப்பில் சேரலாம் என அறிவித்திருக்கிறது.
ஒன்றியத்தில் ஜீரோ ஆட்சி நடைபெறுகிறது அதனால் தான் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றால் போதும் வைத்திருக்கிறார்கள் என ஒரு நண்பர் என்னிடம் கூறினார்.
நான்கு சதவீதம் பேர் தங்கள் மதவெறிக்காக மகாத்மா காந்தியை கொலை செய்தார்கள்.நாட்டில் அமைதியாக இருக்க அனைவரும் சாதி மத வேறுபாடின்றி தமிழனாக, இந்தியாவாக ஒன்றாக வாழ வேண்டும் வேண்டும் என்றார்.