CPI Party-திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் தொகுதி உடன்பாடு தொடர்பாக
பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் பாஜகவை படுதோல்வி அடையச் செய்வது என கட்சியின் மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது என்று அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்று கூறி
இந்திய அரசமைப்பு சட்டத்தின் விழுமியங்களை காலில் போட்டு மிதித்து பாசிச சர்வாதிகார அடிப்படையில் ஆட்சி நடத்தி வருகிறது.
ஜனநாயக உரிமைகள், மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவம், மனித நேயம், மதச்சர்பின்மை, சமூக நீதி,
நாடாளுமன்ற ஜனநாயகம் ஆகிய அனைத்தையும் கபளீகரம் செய்து மதவெறியை தூண்டிவிட்டு மக்களை கூறுபோட்டு வருகிறது.
பாஜகவின் ஆட்சியதிகாரத்தை பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார அமைப்புகள் காஷ்மீர், மணிப்பூர்,
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு படுகொலைகளை அரங்கேற்றி நாட்டையே ரணகளமாக மாற்றி வருகின்றன.
தமிழகத்தில் இந்தி திணிப்பு, நீட் தேர்வுக்கு விலக்களிக்க மறுப்பு, தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடர் வெள்ள சேதத்துக்கு உரிய நிவாரண நிதி கொடுக்க மறுத்து வருவது,
மாநிலத்துக்கான நிதி பங்கீட்டை மறுப்பது, ஆளுநரை பயன்படுத்தி போட்டி அரசாங்கத்தை உருவாக்குவது உள்ளிட்ட வஞ்சக அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் துணை போகின்றன.
கடந்த 10 ஆண்டுகளாக தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட
அனைத்து தரப்பு மக்களும் சொல்லொணா துயரங்களைச் சந்தித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட மோசமான மத்திய பாஜக அரசை ஆட்சியிலிருந்து விரட்டி, இந்திய தேசத்தை காப்பது என்ற உன்னதமான குறிக்கோளோடு
நாடு முழுவதும் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கி செயல்படுகின்றனர்.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1750850193753620541?s=20
இக்கூட்டணி நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனடிப்படையில் தமிழகம் முழுவதும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணிகள் வீடு, வீடாக சென்று மத்திய பாஜக அரசின் நாசகர கொள்கைகளையும்,
இதற்கு துணைபோகும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்து எதிர்வரும் தேர்தலில் பாஜகவை
படுதோல்வி அடையச் செய்வது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக தொகுதி பங்கீட்டுக்குழுவுடன் தொகுதி உடன்பாடு தொடர்பாக,
பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்(CPI Party) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.