சென்னை மாநகர பகுதிகளில் அடுக்குமாடி கார் நிறுத்தங்கள் கட்டும் திட்டத்தை கைவிட்டு, பொது போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
உலக தூய காற்று தினத்தை முன்னிட்டு, பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி சென்னை மாநகராட்சி ஆணையரை சந்தித்து, சென்னை மாநகரில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவது குறித்து வலியுறுத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
5,045 கோடியில் குப்பை எரியாலை அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும். இதற்கு மாறாக பூஜ்ஜிய குப்பை எனப்படும் குப்பை இல்லா சென்னை என்ற கோட்பாட்டை சென்னை மாநகராட்சி விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
மேலும் சென்னை மாநகர பகுதிகளில் 10 இடங்களில் அடுக்குமாடி கார் நிறுத்தங்கள் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். சென்னையில் உள்ள ஏழு சதவீதம் பேர் மட்டுமே கார்களை பயன்படுத்தி வரக்கூடிய நிலையில், 56 சதவிகித மக்கள் பயன்படுத்தும் பொது போக்குவரத்தை மேம்படுத்த மீண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், சென்னையில் தூய காற்று செயல் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், கடந்த 2022 பிப்ரவரி மாதம் சென்னை மாநகராட்சி தூய காற்று செயல் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டது.
ஆனால் இத்திட்டம் குறித்து அதற்கு பின்னர் எவ்விதமான விளக்கமும் வெளியிடப்படவில்லை என்றார் மேலும் மோட்டார் வாகனம் அல்லாத போக்குவரத்து முறையை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.