மதுரை அருகே திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் வாகனம் மீது காலணி வீசப்பட்டது. ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியதால் அங்குப் பிரச்சனை ஏற்பட்டது.
இதன் காரணமாக ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டுப் புறப்பட்டபோது விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது பாஜகவினர் செருப்பை வீசி எறிந்தனர்.
இதையடுத்து அங்கிருந்த அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை உடனடியாக அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய பின் அமைச்சரின் வாகனம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது தாக்குதலையடுத்து, பாஜகவினர் 6 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சர் கார் மீது காலணி வீசியது தொடர்பாக, பாஜக-வினர் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாகவும் மதுரை காவல் ஆணையர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.