சென்னையில் இருந்து நேற்று கும்பகோணம் நோக்கி சென்ற அரசுப்பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வெள்ளாற்று மேம்பாலத்தில் மோதி விபத்திற்குள்ளாகியது.
சென்னையில் இருந்து அரசுப்பேருந்து ஒன்று சுமார் 40 பயணிகளுடன் நேற்று கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. திருவாரூர் சந்திரசேகரபுரத்தை சேர்ந்த வீரமணி என்பவர் ஓட்டிச் சென்ற இந்த பேருந்து, நள்ளிரவு 12.30 மணிக்கு கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சென்னிநத்தம் குறுக்கு சாலை வெள்ளாற்று மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி, சுவரை உடைத்துக்கொண்டு சென்று, முன்பகுதி மட்டும் பாலத்தில் அந்தரத்தில் தொங்கியப்படி நின்றது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். பயணிகளின் சத்தத்தை கேட்ட அப்பகுதியில் வசிக்கும் மக்கள், உடனடியாக சென்று பேருந்தின் கண்ணாடியை உடைத்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பயணிகளை மாற்றுப் பேருந்து மூலம் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் அந்தரத்தில் தொங்கிய பேருந்தை மீட்பு வாகனம் மூலம் மீட்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது