சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் நிறுத்தி வைத்திருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வாகனங்கள் தீ பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக மின்சார ஸ்கூட்டர்கள் தீ பிடித்து எரியும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வாகன ஓட்டிகள் மத்தியில் பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் பேருந்துகள், லாரிகள், கார்கள் இரு சக்கர வாகனங்கள் என சிறிய வாகனங்கள் முதல் பெரிய வாகனங்கள் வரை அவ்வப்போது தீ பிடித்து எறியும் சம்பவங்கள் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சென்னை கஜபதி தெருவின் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ கார் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தீ அணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலில் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி தீயணைப்புத் துறையினர் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், கார் மெக்கானிக் கடை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் காரில் தீப்பிடித்து முழுவதும் எரிந்து நாசமடைந்தது. இந்த வாகனம் யாருடையது என கண்டுபிடிக்க முடியவில்லை. அதே பகுதியயைச் சேர்ந்த நபர்களும் காருக்கு உரிமை கோராத நிலையில், மெக்கானிக் கடைக்கு பழுது நீக்க கார் எடுத்து வரப்பட்டு இருக்கலாம் என்கிற அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது விஷமிகள் யாராவது தீ வைத்து விட்டு சென்றார்களா? என்கிற அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.