மதுரவாயலில் மொட்டை மாடி சுவரில் (terrace wall) அமர்ந்து கொண்டு செல்போன் பேசிய பிளஸ்-2 மாணவி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கம், எஸ்.வி.எஸ். நகர் பகுதி வசித்து வரும் வெங்கடேசன் என்பவற்றின் மகள் சௌமியா. 17 வயதாகும் மாணவி சௌமியா, 12-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு கல்லூரியில் சேர்வதற்கு முயற்சி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் புதன் கிழமை அன்று இரவு மதுரவாயல், அலங்கார் நகர் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு மாணவி சௌமியா சென்றுள்ளார். அப்போது, சௌமியாவின் சகோதரி கர்ப்பிணியாக இருந்ததால் இருவரும் சேர்ந்து வீட்டின் மாடியில் நடைபயிற்சி செய்வதற்காக மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர்.
மொட்டை மாடியில் உள்ள சுவற்றின் (terrace wall) மீது அமர்ந்து கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்த சௌமியா எதிர்பாராத விதமாக திடீரென மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதில் படுகாயம் அடந்த சௌமியாவை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சௌமியாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி சௌமியா உயிரிழந்தார்.
அதையடுத்து, இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மதுரவாயல் காவல் துறையினர் சௌமியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.