ஊட்டி அருகே சத்து மாத்திரைகளை (nutritional pills) அதிகம் உட்கொண்டு பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில், இந்த விவகாரத்தில் 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதகை நகராட்சியில் செயல்பட்டு வரும் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் நான்கு மாணவிகள் போட்டிபோட்டு ஊட்டச்சத்து மாத்திரைகளை (nutritional pills) உட்கொண்டதால் நான்கு பேருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து, மாணவிகள் 4 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு மாணவி உயிரிழந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கவனக்குறைவாக செயல்பட்ட தலைமை ஆசிரியர் முஹம்மது அமீன் மற்றும் மாத்திரையை விநியோகித்த ஆசிரியை கலைவாணி ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியம் கூறுகையில்..
வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் குழந்தைகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்படுவது வாடிக்கை. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் இது வழங்கப்படும்.
பொதுவாக, ஆசிரியர்கள் மாணவர்களிடம் ஒரு மாத்திரையை கொடுப்பார்கள். இந்த மாத்திரை வழங்கப்படுவதன் நோக்கம் மாணவர்களுக்கு இரும்பு சத்து உள்ளிட்ட சத்துக்கள் கிடைப்பதற்காக தான் வழங்கப்படும்.
இந்நிலையில், ஊட்டியில் இருக்கும் உருது பள்ளி ஒன்று வியாழக்கிழமை மாத்திரைகள் தருவதற்கு பதிலாக வெள்ளிக்கிழமை கொடுத்திருக்கிறார்கள். அதுவே பெரிய தவறு.
இது சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறைக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மாத்திரை வழங்கப்பட்ட போது வழக்கமாக கொடுக்கும் ஆசிரியருக்கு பதிலாக வேறு ஒரு ஆசிரியர் சென்று ஒவ்வொரு மாத்திரை வழங்குவதற்கு பதிலாக மொத்தமாக அட்டை அட்டையாக மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்.
இதனை அடுத்து, தான் மாணவ மாணவியர் போட்டி போட்டுக் கொண்டு பத்து மாத்திரை, 20 மாத்திரை, ஒரு சிலர் 30 மாத்திரை என்று அதிகபட்சமாக உயிரிழந்த மாணவி 70 மாத்திரை வரையிலும் சாப்பிட்டு உள்ளனர்.
இப்படி போட்டி போட்டுக் கொண்டு யார் அதிக மாத்திரைகள் சாப்பிடுவார்கள் என்று சாப்பிட்டுள்ளனர். இதை அந்த ஆசிரியரும் கண்காணிக்காமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி கல்வி துறைக்கும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாத்திரைகளை ஆசிரியர்களிடம் கொடுத்துவிட்டு அவர்கள் மாத்திரைகளை மாணவர்களுக்கு கொடுத்தார்களா? எப்படி கொடுத்தார்கள் என்பதை கண்காணிக்காத சுகாதார துறையைச் சேர்ந்த ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஆசிரியர்கள் இருவர் மீது தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி கல்வித்துறையும் இது சம்பந்தமாக தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.