பாஸ்போர்ட் வாங்குவதற்காக வரிசையில் நின்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிகழ்வு இலங்கையில் அரங்கேறியுள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள மக்கள் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உச்சத்தை தொட்டுள்ளதால் ஒருவேளை உணவிற்கு கூட அங்குள்ள மக்கள் தவித்து வருகின்றனர்.
எரிபொருள் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு டீ 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலைக்கு இலங்கை பொருளாதாரம் மாறிவிட்டது. மேலும் வேலையின்மை போன்ற சிக்கல்களால் என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி வாழ்கின்றனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும்பாலான மக்கள் மாற்று இடத்தை நோக்கி நகர தொடங்கி விட்டனர். சிலர் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்ல வேண்டும் என முடிவு எடுத்துவிட்டனர். இதனால், வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஆனால், பாஸ்போர்ட் பெறுவதற்காக காத்திருக்கும் அவலம் ஏற்படுகிறது. 5 நாட்கள் வரை வரிசையில் காத்திருந்து பாஸ்போர்ட் பெற்று செல்லும் சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், பாஸ்போர்ட் அலுவலகத்தில் இரண்டு நாட்களாக வரிசையில் நின்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
கொழும்புவில் உள்ள அலுவலகத்தில் பாஸ்போர்ட் பெறுவதற்காக அந்த பெண் வரிசையில் நின்றுள்ளார். மத்திய மலையகத்தை சேர்ந்த அந்த பெண் தனது கணவருடன் இரண்டு நாட்களாக வரிசையில் காத்திருப்பது தெரியவந்தது. பின்னர் அவருக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே, அங்கு பாதுகாப்பிற்கு நின்ற ராணுவவீரர்கள் 26 வயதுடைய அந்த பெண்ணை அருகில் உள்ள வைத்திய சாலைக்கு கொண்டு சென்றதும் அங்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக தனது கணவருடன் சேர்ந்து வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்து பிழைத்து கொள்ளலாம் என்ற முடிவில் பாஸ்போர்ட் பெறுவதற்காக வந்துள்ளார். ஆனால் இரண்டு நாட்களாக வரிசையில் காத்திருந்ததால் பிரசவலி ஏற்பட்டு குழந்தை பிறந்ததாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.