சென்னை மேடவாக்கம் மேம்பாலத்தில், பைக் மற்றும் கார் நேருக்கு நேர் மோதியதில் 30 அடி உயரத்தில் (30 feet height) இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்ணும், பைக்கை ஓட்டிச்சென்ற இளைஞரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த பம்மல், எல்.ஐ.சி., காலனியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருக்கு கலைச்செல்வி என்ற மகளும், சந்தோஷ் குமார் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
இதையடுத்து, கலைச்செல்விக்கு திருமணமாகி, தாம்பரம் அடுத்த சந்தோஷ்புரம் பகுதியில், கணவர் சுரேந்தராவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை தனது தம்பி சந்தோஷ்குமார், உடன் சைதாப்பேட்டையில் வசிக்கும் பெரியப்பா குமாரவேலுவை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது, மேடவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்தபோது, சந்தோஷ்குமார் பைக்கின் மீது பின்னால், வந்த கார் அதிவேகமாக மோதியது.
இதில் பைக்கை ஓட்டி வந்த சந்தோஷ்குமார் பைக்குடன் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி பலத்த காயமடைந்த நிலையில், பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த கலைச்செல்வி 30 அடி உயர (30 feet height) பாலத்திலிருந்து கீழே தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்தார்.
இந்நிலையில், உடனடியாக அக்கம்பக்கத்தினர் கலைச்செல்வியை மீட்டு அருகிலுள்ள பள்ளிக்கரணை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
மேலும், பாலத்தின் மீது படுகாயத்துடன் மயங்கி கிடந்த சந்தோஷ்குமாரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.
பின்னர், குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்தோஷ்குமாரும் செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி பரிதமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்த தகவலின் பேரில் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கலைச்செல்வி மற்றும் சந்தோஷ்குமார் உடலை கைப்பற்றி உடற் கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனர் ஆலம், என்பவரை கைது செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேம்பாலத்தில் உள்ள வளைவில் வேகமாக சென்றதால் காரை கட்டுப்படுத்த இயலாமல் இந்த விபரீத விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளார்.