ஆருத்ரா மோசடி வழக்கில் தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே.சுரேஷின்(RKSuresh) சொத்துகளை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் பணம் போட்டால் மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரும் எனக் கவர்ச்சிகரமான விளம்பரத்தைக் கொடுத்து பொதுமக்களிடமிருந்து 2,00438 கோடி மோசடியில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் மோசடியில் ஈடுபட்டதாக,தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குநர்கள் பாஸ்கர் , மோகன்பாபு, செந்தில்குமார், நாகராஜ், மற்றும் பேச்சிமுத்து ராஜா, அய்யப்பன், ரூசோ, முன்னாள் பாஜக நிர்வாகி ஹரிஷ் , மாலதி, இயக்குநர் மைக்கேல் நிர்வாகிகள், ஏஜெண்ட்டுகள் உள்ளிட்ட 21 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் பாஜகவில் ஓபிசி பிரிவின் துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கும் ஆர்.கே.சுரேஷ், ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவன வழக்குகளில் இருந்து, தனது நண்பர்களை தப்ப வைக்க உதவி செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் ஆர்.கே.சுரேஷ் துபாயில் தலைமறைவாகிய உள்ளதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து குற்றப்பத்திரிகை தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து ஆர்.கே.சுரேஷுடம் விசாரணை நடத்த முடிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் ஆர்.கே.சுரேஷின் சொத்துகளை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும் துபாயில் உள்ள அவரை அந்நாட்டு அரசை தொடர்பு கொண்டு பரஸ்பர சட்ட நடவடிக்கை முறையில் இந்தியா அழைத்துவரவும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.