பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்.வி.சேகருக்கு(sv shekhar )போன் மூலம் கொலை மிரட்டல் வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக எஸ்.வி.சேகர் தேர்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, அக்கட்சியுடன் ஏற்பட்ட மோதலால் 2009 ஆம் ஆண்டு அ.தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனையடுத்து பாஜகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வரும் எஸ்.வி.சேகர் (sv shekhar), அவ்வப்போது பேசும் அரசியல் ரீதியான கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
கடந்த சில வாரங்களாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது நேரடியாகவும் மறைவுமுகமாகவும் கருத்துகளை தெரிவித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தனக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகக் கூறி பட்டினம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் கர்நாடக தேர்தலில் தமிழ்நாடு பாஜக தலைவர்களின் பங்களிப்பு குறித்து ஊடகங்களில் பேசியதால் தனக்கு போன் மூலம் மிரட்டல் வருவதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.