கரகாட்டக்காரன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா காலமானார். அவருக்கு வயது 70.
புகழ்பெற்ற நடிகர் டி.எஸ் பாலையாவின் மூன்றாவது மகன் ரகு பாலையா. திரையுலகத்திற்கு அறிமுகமானதும் இவரை பலர் ஜூனியர் பாலையா என அழைக்கத் தொடங்கினர்.
1975ஆம் ஆண்டு வெளியான ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், கரகாட்டக்காரன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். மேலும் ’கோபுர வாசலிலே’, சின்னத்தாயி’, ‘சங்கமம்’, ‘வின்னர்’ உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
40 வருடங்களாக தமிழ் சினிமாவில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் பல தொலைகாட்சி சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
2007 ஆம் ஆண்டு வரை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த இவர் சிறிய இடைவெளிக்குப் பிறகு 2012 ஆம் ஆண்டு சமுத்திரகனி இயக்கத்தில் வெளியான ‘சாட்டை’ திரைப்படத்தில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி கவனத்தை பெற்றார்.
அதனைத் தொடர்ந்து ‘கும்கி’, ‘தனி ஒருவன்’, ‘புலி’ அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ உள்ளிட்ட திரைபடங்களிலும் நடித்த ஜூனியர் பாலையா, இறுதியாக 2021ல் வெளியான ’என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வந்த இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் இன்று அதிகாலை காலமானார். கடந்த சில நாட்களாகவே உடல் நிலை சீராக இல்லாத காரணத்தினால் இவர் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.